

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் தொடங்கினார். மதுரையில் பிப்ரவரி 21-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமைப்பது உள்ளிட்ட கொள்கைகளை அறிவித்த கமல்ஹாசன், மக்களின் தேவைகளே எங்களின் கொள்கைகள் என்று தெளி வுபடுத்தினார். அத்துடன் வாருங்கள் ஒன்று சேர்ந்து ஊழலை ஒழிப்போம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெறும் என்றும், அதில் மதுரையை விட மக்கள் கூட்டத்தை கூட்டி காண்பிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
அதன்படி நாளை (4-ந் தேதி) திருச்சியில் பொதுக் கூட்டம் பொன்மலை ஜி. கார்னரில் நடைபெற உள்ளது. இதற்காக கமல்ஹாசன் இன்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். செல்லும் வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய ரெயில் நிலையத்தில் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே டுவிட்டரில் தனது ரெயில் நிலைய சந்திப்பு அரசியல் ஆக்கப்பட்டதால் ரசிகர்களை நேரடியாக திருச்சி கூட்டத்தில் சந்திப்பதாக தெரிவித்தார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் கமல்ஹாசனுக்கு ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்திற்காக பொது மக்களுக்கு இடையூறாக பேனர், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவை வைக்க கூடாது என்றும், பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வரக்கூடாது என்றும் கூறியிருந்தார். அதன் படி திருச்சி ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் வரைந்து போஸ்டர்கள் மட்டும் ஒட்டியுள்ளனர்.
நாளை கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காந்தி மார்க்கெட், மலைக்கோட்டை என்.எஸ். பி.ரோடு, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்த அழைப்பிதழை வழங்கும் ஒவ்வொரு இடத்திலும், இது பொதுக்கூட்டம் அல்ல தங்கள் வீட்டு விழா என கூறி அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மேள, தாளத்துடன் ஊர்வலமாக சென்று தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழ வகைகளுடன் அழைப்பு விடுத்தனர்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை கழக உறுப்பினர்களை அறிவித்தார். மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை என மக்கள் நீதி மய்ய நிர்வாகி தெரிவித்திருந்தார்.
இதனால் திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டம் வாரியாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும், மேலும் கட்சி தொடர்பான பல முக்கிய கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெயிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பு நாளை காலை 11 மணியளவில் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். #KamalHaasan #Tamilnews