

சென்னை:
நடிகர் கமல்ஹாசன் 2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் எதிலும் போட்டியிடவில்லை. கமல்ஹாசன் கிராமசபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்துவிட்டார்.
ரஜினியுடன் இணைவார் என்று கடந்த சில வாரங்களாக செய்தி பரவிய நிலையில் கமல்ஹாசன், தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.வுடன் கமல் கூட்டணி வைப்பார் என்ற ரீதியில் செய்தி பரவியது. ஆனால் போராட்டத்தில் கமல்ஹாசன் கட்சி கலந்து கொள்ளவில்லை.
தி.மு.க.வுடன் கூட்டணி என்ற செய்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ரஜினியும், கமலும் ரகசியமாக கூட்டணி வைத்து ஆலோசனை செய்து செயல்படுகிறார்கள் என்ற ரீதியில் ஒரு செய்தி பரவுகிறது. தன்மீது காவி சாயம் பூசப்படுவதாக ரஜினி பேட்டி அளிக்க கமலின் ஆலோசனை தான் காரணம் என்றும் தி.மு.க. போராட்டத்தில் இருந்து கமல் பின்வாங்க ரஜினியின் ஆலோசனை தான் காரணம் என்றும் ஒரு செய்தி பரவுகிறது.
இந்தநிலையில் மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன் நாளை திரும்புகிறார். அதன் பின்னர் மீண்டும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளார். இதையொட்டி நேற்று கட்சியின் பல்வேறு அணிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அடுத்து கமல்ஹாசன் தனது முழு கவனத்தையும் சட்டசபை தேர்தலில் மட்டுமே செலுத்த இருப்பதாக கூறுகிறார்கள். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-
2021 சட்டசபை தேர்தலை மட்டும்தான் எங்கள் இலக்காக வைத்து செயல்படுகிறோம். இந்த உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு எங்களது சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் தொடங்க இருக்கிறது.
பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.
தற்போது காலில் அறுவை சிகிச்சை முடிந்து ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வருவதால், வரும் பிப்ரவரி மாத இறுதியில் அவர் இந்த பயணத்தை தொடங்குவார். இதற்காக ஏற்கனவே பிரத்யேக முறையில் தயார் செய்யப்பட்ட பிரசார வாகனத்தில் இப்போது சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனின் பிரசார வாகனத்தில் ‘உங்கள் நான்’ என்ற வாசகத்துடன் கரம்கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. தொலைக்காட்சி, ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கிய வகையில் அந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே இந்த வேன் தயார் செய்யப்பட்டிருந்தாலும், இப்போது அதன் உள்வடிவமைப்பில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த பிரசார சுற்றுப்பயணத்துக்கு அடுத்த 50 வாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய பிப்ரவரி 21-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் கமல் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதை நிறைவு செய்வார். இதற்காக பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பிரசாரமும் இன்னொரு பக்கம் படப்பிடிப்பும் நடக்குமாறு திட்டமிடப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த பிறகு கமல் அரசியலில் இன்னும் வேகம் எடுப்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.