

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ள நிலையில் டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் இன்று காலை கல்லணை வந்து சேர்ந்தது. இதையொட்டி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி கல்லணையில் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பாரதிமோகன், கலெக்டர்கள் (தஞ்சை) அண்ணாதுரை, (நாகை) சுரேஷ்குமார், (திருவாரூர்) நிர்மல்ராஜ், (திருச்சி) ராஜாமணி, (அரியலூர்) லெட்சுமி பிரியா, பொதுப்பணிதுறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி, சேகர், ராஜேந்திரன், ஜெயராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசாமி, எம்.ஜி.எம். சுப்பிரமணியம், ராம.ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பூங்காவில் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் அங்குள்ள காவிரிதாய் சிலை அகத்தியர் சிலை, கரிகாற்சோழன் சிலை, ராஜ ராஜ சோழன் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் அமைச்சர்கள், கலெக்டர்கள் பட்டனை அமுக்கி கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்தனர். முதலில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றில் 4 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கல்லணை திறக்கப்பட்டதும் அமைச்சர்கள், கலெக்டர்கள் ஆற்றில் மலர்கள், நெல் விதைகளை தூவினர். அமைச்சர் துரைக்கண்ணு பேசும் போது, சம்பா சாகுபடி தொகுப்பு திட்டத்துக்காக 41.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள் பெற்று சம்பா சாகுபடியை செய்து நிறைந்த விளைச்சல் கிடைக்க பாடுபடவேண்டும் என்று கூறினார்.
கல்லணை திறக்கப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 2.60 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 2.72 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி நடைபெற உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை விவசாயிகளும் கல்லணை திறப்பின் மூலம் தண்ணீர் பெற்று விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேட்டூர் அணையில் தற்போது 94.47 அடி தண்ணீர் உள்ளது. விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மைக்கு உதவ வேண்டும் என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் சம்பா சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ளலாம், என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
கல்லணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் சம்பா சாகுபடி பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.