

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் நாக மண்டலம் கிராம பகுதியில் ஒரு வீட்டு முன்பு சாக்கு மூட்டை ஒன்று கடந்த 17-ந் தேதி முதல் கிடந்தது.
இந்த சாக்கு மூட்டையை எடுத்து செல்ல யாரும் வராததால், அந்த பகுதியை சேர்ந்தவர் இது பற்றி பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு செந்தில் குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதனை திறந்து பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் கொத்து, கொத்தாக வெடிப்பொருட்கள் இருந்தது. உடனே போலீசார் இது பற்றி தக்கலை டி.எஸ்.பி.க்கு தகவல் கொடுத்தனர்.
தக்கலை போலீஸ் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி அதில் இருந்த வெடி பொருள்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சாக்குமூட்டையில் 10 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்கள், கண்ணாடிகள் ஆகியவை இருந்தது. இதனை கைப்பற்றிய நிபுணர்கள் அதனை அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வெடி பொருள்கள் நிரம்பிய சாக்குமூட்டையை நாகமண்டலம் பகுதியில் வீசி சென்றது யார்? எதற்காக அங்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல பயங்ரவாதிகள் ஊடுருவல் என தகவல் வெளியான வேளையில் களியக்காவிளை பகுதியில் வெடி பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.