ஆப்கானிஸ்தான் - கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
காபுல்:
ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர். ராணுவமும் காவல்துறையும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, தலைநகர் காபுலில் காசாபா தெருவில் இன்று காலை கார் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள் காரில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கார் குண்டு வெடித்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. விசாரணையில் குழந்தைகளும் இந்த தாக்குதலில் பலியானது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

