காணும் பொங்கலுக்கு பலத்த பாதுகாப்பு: மெரீனா, கிண்டி பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

பொங்கல் பண்டிகையையொட்டி பொழுது போக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மெரீனா, கிண்டி பூங்கா போன்ற இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கலுக்கு பலத்த பாதுகாப்பு: மெரீனா, கிண்டி பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
Published on

சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி பொழுது போக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இன்று போகி பண்டிகை. நாளை பொங்கல் பண்டிகையும், நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்த 3 நாட்களில் பொழுது போக்கும் இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல் தினத்தில் தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மெரீனா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா இடங்களில் கூட்டம் அலைமோதும். மெரீனாவில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கானோர் கூடினர். கிண்டி சிறுவர் பூங்காவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடினர்.

இந்த ஆண்டும் அதைவிட அதிகமானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காணும் பொங்கலுக்கு பலத்த பாதுகாப்பும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மெரீனா கடற்கரையில் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபவர்களை தீவிரமாக கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணும் பொங்கலுக்கு வருபவர்கள் ஆர்வம் மிகுதியால் கடலில் குளிப்பார்கள். இதனால் உயிர் இழப்பு ஏற்படும். இதை தடுக்க அண்ணா நினைவிடத்தின் பின்பகுதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டை அமைத்து தடுப்பு வேலி போடப்படும். அதையும் தாண்டி செல்ல முயல்பவர்கள் குதிரைபடை வீரர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

மணலில் வேகமாக செல்லும் 5 வண்டிகளும் நிறுத்தப்படும். இதே போல பல இடத்தில் கூடாரம் அமைத்து பாதுகாப்பு மற்றும் சேவைப்பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் விதமாக கடந்த முறையை போல கைகளில் ‘டேக்’ கட்டப்படும். அதில் போன் நம்பர் எழுதப்பட்டு இருக்கும்.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் மெரீனா மற்றும் அண்ணா சதுக்கம் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கிண்டி சிறுவர் பூங்காவில் 4 கவுண்டர்கள் இருக்கும். காணும் பொங்கலில் கூட்டம் அலை மோதும் என்பதால் மேலும் 4 கவுண்டர்கள் அமைக்கப்படும். மேலும் அன்றைய தினத்தில் பணிக்கு முன்னதாக வரவும் ஊழியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 100 பேர் பணியில் இருப்பார்கள். கூடுதலாக 50 வனப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.

தடுப்பு வேலி அமைத்து 8 வழிகளில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதே போல வெளியே வருவதற்கான வழியும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி உள்பட பல்வேறு வசதிகளும் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

இதே போல வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com