

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன் சக நீதிபதிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
இதையடுத்து மேற்கு வங்காள நீதிபதியாக அவர் மாற்றப்பட்டார்.
இதன் பின்னரும் நீதிபதி கர்ணன் நீதிபதிகள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தவில்லை. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீதே அவர் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு கர்ணனுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.
கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்று அவரது வீட்டுக்கு சென்ற மருத்துவர்களை கர்ணன் திருப்பி அனுப்பினார். தனக்கு எதிராக தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராகவும் அவர் உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் மேற்கு வங்காள டி.ஜி.பி உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி போலீஸ் படையுடன் சென்னை வந்தார்.
சென்னையில் தங்கி இருந்த நீதிபதி கர்ணன் அதற்குள் தப்பிவிட்டார். அவர் காளஹஸ்திக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் கர்ணனை பிடிக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன் தனது பதவியில் இருந்து இன்று ஓய்வு பெற்றார். இருப்பினும் அவர் எங்கிருக்கிறார் என்கிற தகவல் இன்னும் தெரியாமலேயே உள்ளது. போலீசார் கர்ணனை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.