

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மீது சாதிய ரீதியாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறினார்.
நீதிபதிகளை தேர்வு செய்யும் குழு மீதும், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறி பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இதனால் நீதிபதி கர்ணன் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கர்ணனுக்கு சம்மன் அனுப்பியது.
இதற்கு போட்டியாக நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தார். இந்த மோதல் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் மாதம் 31-ந்தேதி அரசியல் சட்ட அமர்வு முன் ஆஜரானார். அப்போது நீதிபதிகளுடன் நேருக்கு நேராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள் உங்களுக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகும் நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகளுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்தார். நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை விதித்தும் உத்தரவிட்டார்.
நீதிபதி கர்ணனின் மோதல் போக்கு உச்சக்கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மே 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில் நீதிபதி கர்ணனிடம் கொல்கத்தா அரசு மருத்துவமனை டாக்டர்கள் கொண்ட குழுவினர் 4-ந்தேதி (இன்று) மனநல மருத்துவ பரிசோதனை நடத்தி 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மருத்துவ குழுவுக்கு மேற்கு வங்காள டி.ஜி.பி. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், நீதிபதி கர்ணன் பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு பிறப்பித்த எந்த உத்தரவையும் செயல்படுத்த வேண்டாம் என்று கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து கொல்கத்தா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று மதியம் கொல்கத்தாவில் உள்ள நீதிபதி எஸ்.கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.
அவர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகளும் சென்றனர். கர்ணன் வீட்டுக்கு வெளியேயும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
மருத்துவ குழுவினர் சென்றபோது நீதிபதி கர்ணன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தனது வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தார். டாக்டர்கள் குழுவுக்கு டீ வழங்கச் சொல்லி உபசரித்தார்.
தொடர்ந்து மருத்துவக் குழுவினர் நீதிபதி கர்ணனிடம் சாதாரண முறையில் பேசி பல்வேறு தகவல்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்களை குறிப்பு எடுத்துக் கொண்டனர். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மறுத்து விட்டார்.
எனவே மனநல பரிசோதனைக்காக நீதிபதி கர்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா? என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரது வீட்டில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு உள்ளனர்.
டாக்டர்களிடம் நீதிபதி, கர்ணன் கூறும்போது, “நான் இயல்பாகத்தான் இருக்கிறேன், நல்ல மன நிலையில் உள்ளேன்” என்று தெரிவித்தார்.
நீதிபதி கர்ணனிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் 8-ந்தேதி டாக்டர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு மேல் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.