ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும்- நீதிபதி தகவல்
மதுரை:
கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறை வெடித்தது.
அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி ராஜேஸ்வரன் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினார். இன்று 9-வது கட்ட விசாரணை தொடங்கியது.
அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பலர் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.
பின்னர் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக 9-வது கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் பெறப்பட்டன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநபர்கள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்ததாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும். அதன் பிறகு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Jallikattuprotest

