நிரபராதி என்ற தீர்ப்பை கேட்ட மகிழ்ச்சியில் உயிரை விட்ட துணை தாசில்தார்

போலி பட்டா வழக்கில் தன்னை நிரபராதி என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததும் மகிழ்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார், அடுத்த சில மணி நேரத்தில் மரணம் அடைந்தார்.
கோர்ட்
கோர்ட்
Published on

மதுரை:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் துணை தாசில்தாராக பணியாற்றி கடந்த 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பணியில் இருந்தபோது தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு போலி பட்டா வழங்கியதாக 2003-ம் ஆண்டு இவர் மீது புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து தனியாக குற்ற வழக்கையும் அவர் மீது போலீசார் பதிவு செய்தனர். சுவாமிநாதனை ஓய்வு பெற அனுமதித்தாலும், ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் அவரை கலெக்டர், பணி இடைநீக்கம் செய்தார். இதன்பின்னர் நடந்த துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவரது ஓய்வூதிய தொகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம், 3 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்ய கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டீக்காராமன் கடந்த 24-ந்தேதி தீர்ப்பு அளித்தார். அதில், “மனுதாரர் சுவாமிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இவருக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த தீர்ப்பு விவரத்தை சுவாமிநாதனிடம், அவரது வக்கீல் எச்.ஆறுமுகம் கூறியுள்ளார்.

இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த 74 வயதான சுவாமிநாதன், நான் நேர்மையான அதிகாரியாக பணியாற்றினேன். ஓய்வு பெறும் நேரத்தில் என் மீது இப்படி ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தினர். ஐகோர்ட்டே என்னை நிரபராதின்னு சொன்ன பிறகுதான், மகிழ்ச்சியாக இருக்கு, சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக தூங்க போகிறேன்” என்று சொல்லி மதியம் 12 மணிக்கு படுக்கையில் படுத்தவர் அதன்பின்னர் எழுந்திருக்கவில்லை. அவர் உயிர் தூக்கத்திலேயே போய் விட்டது.

இந்த தகவலை அவரது வக்கீல் ஐகோர்ட்டுக்கு கடிதமாக எழுதி தெரிவித்துள்ளார். அதில், “16 ஆண்டுகளாக தன் மீதான வீண் பழியால் மனவேதனை அடைந்துள்ள சுவாமிநாதன், நிரபராதி என்றதும், மன நிம்மதியுடன் நிரந்தரமாக தூங்கி விட்டார்” என்று கூறியுள்ளார். இந்த கடிதம் ஐகோர்ட்டு நீதிபதிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு விதமான பரபரப்பை உண்டாக்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com