ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா 17/1

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்றுவரும் 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #JohannesburgTest
ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா 17/1
Published on

ஜொகன்னஸ்பர்க்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அம்லா 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

42 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் விஜய்யுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 

உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து மூன்றாம் நாளின் இரண்டாவது செஸ்சன் ஆட்டம் நடைபெற்றது. அடுத்ததாக கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். கோலி 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ரகானேவுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் எடுத்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷம்மி அதிரடியாக விளையாடினார். அவர் 27 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா,  மோர்னே மார்கல் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாப்ரிக்கா அணி 241 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. டெஸ்ட் கிர்க்கெட்டில் இது குறைவான ஸ்கோராக இருப்பினும் இந்த மைதானத்தில் இந்த இலக்கு தென்னாப்ரிக்கா அணிக்கு கடும் சவாலான இலக்காக இருக்கும் என கூறப்படுகிறது. 

இதையடுத்து தென்னாப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்க்ராமும் களமிறங்கினர். மார்க்ராம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷம்மி பந்தில் பார்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாசிம் அம்லா களமிறங்கினார். தென்னாப்ரிக்கா அணி 8.2 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீசிய பந்து வழக்கத்தைவிட அதிகமாக பவுன்சாகி எல்கரின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் எல்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர். 

அதன்பின் இரு அணி கேப்டன்களுடன் நடுவர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மைதானத்தில் நிலையை மனதில் வைத்து மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் தென்னாப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 224 ரன்கள் தேவைப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியின் வெற்றிக்கு 9 விக்கெட்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியினரும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் பிடித்தபோது பலமுறை பந்தினால் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SAvIND #JohannesburgTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com