

புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே சார்க்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36), டிரைவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீப காலமாக ராஜேஷ் டிரைவர் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் மதுகுடிக்கும் பழக்கமும் உள்ள ராஜேஷ் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடி வந்தார்.
இதனால் விரக்தியில் இருந்த ராஜேஷ் சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் ராஜேஷ் வலியால் அலறினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி கோமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ராஜேஷ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews