

மலையாள பட உலகில் சூப்பர்ஸ்டாராக திகழும் மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்...’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது.
இந்த பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் பள்ளி, கல்லூரி விழாக்களில் இந்த பாடலுக்கு மாணவ- மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளம் பேராசிரியையாக பணியாற்றும் ஷெரில் என்பவரும் ஓணம் பண்டிகையையொட்டி அவரது கல்லூரியில் நடந்த விழாவில் இந்த பாடலுக்கு சகபேராசிரியைகள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.
இந்த நடன வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் அதற்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது. ஷெரில் ஒரே நாளில் பிரபலமாகி விட்டார். அவருக்கு சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்த போதும் நடிக்க மறுத்து விட்டார்.
நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் மட்டும் சில நிமிடம் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் வீடியோ ஆல்பத்திலும் ஷெரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஷெரிலை திருமணம் செய்யும் அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் புரபுல்டோமி அம்ம துருத்தில். இவர் தொடுபுழா அருகே உள்ள வாழக்குளம் பகுதியை சேர்ந்தவர். இவர்களது திருமண நிச்சயதார்தம் வாழக்குளத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் இருக்குடும்பத்தையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.