ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் முத்தப் போட்டி நடத்தப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன் மாரண்டி உள்ளார்.

அவர் நேற்று பழங்குடி இன மக்களின் ஆண்டு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இளம் ஜோடிகள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தப்பட்டது.

அந்த போட்டியில் 20 இளம் ஜோடிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்தனர். யார் சிறப்பாக முத்தம் கொடுக்கிறார்களோ அந்த ஜோடிக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் முத்தம் கொடுக்கும் போட்டி பரபரப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து கொண்டு முத்தமிடும் போட்டியை கண்டுகளித்தனர். நிறைய பேர் அதை செல்போனில் படம் பிடித்தனர்.

சிறிது நேரத்தில் அந்த முத்தமிடும் போட்டி காட்சிகள் செல்போன்களில் பரவியது. சமூக வலைத்தளங்களில் அந்த காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த முத்தம் விழாவில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள் சைமன் மாரண்டி, ஸ்டீபன் மாரண்டி இருவரும் பங்கேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. இந்த போட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் செயல் என்று பா.ஜ.க. கூறி உள்ளது.

முத்தம் போட்டிக்கு ஏற்பாடு செய்ததால் 2 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சைமன் மாரண்டி எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படும் வழக்கமான விழாதான். இப்பகுதி பழங்குடி இன மக்களிடம் சமீப காலமாக விவாகரத்து அதிகரித்துவிட்டது. எனவே மக்களிடையே பரஸ்பரம் அன்பை அதிகரிக்க செய்யவே இந்த முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com