சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அண்ணாமலை நகர்:

சிதம்பரம் மெஜஸ்டிக் சிட்டி நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கார்த்தி, கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், கடந்த 28-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த வாட்ச்மேன் கார்த்திக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக்கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி கார்த்தி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவம் நடந்த வீட்டில் இருந்து நந்தனார் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com