அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

அரூரில் வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
Published on

அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூர் ஸ்டேட் பாங்க் பின்புறம் கோவிந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது43). இவர் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் செங்கல்பட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் 1 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது அசோக் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். அதனால் நள்ளிரவு வந்து வீட்டின் பூட்டை கடப்பாரையால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து நகை, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியில்  அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதற்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com