புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் முகமது ஜாவுதீன். காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது வீட்டை பூட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குடும்பத்தினருடன் சென்றிருந்தார். தனது மகளை மட்டும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றார். 

இந்த நிலையில் இன்று காலை முகமது ஜாவு தீனின் மகள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. தனி அறையில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. முகமது ஜாவுதீன் வெளியூர் சென்றதை  நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து முகமது ஜாவுதீனின் மகள் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com