பேரளம் அருகே பால் வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை

பேரளம் அருகே பால் வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரளம் அருகே பால் வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை
Published on

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள நாடாகுடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54), பால் வியாபாரி. இவரது மனைவி கல்பனா. இவர்களது மகன் நவீன் (18).

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து இருந்தார். மற்றொரு அறையில் கல்பனா தனது தாய் பார்வதியுடன் தூங்கினார். நவீன் தேர்வுக்காக பாடங்களை படித்துவிட்டு பின்னர் வெளியே வராண்டாவில் படுத்து விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நைசாக மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் வீட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். மேலும் கணேசன் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்றனர்.

அதிகாலையில் கண்விழித்த கணேசன் அறை கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இந்த சம்பவம் பற்றி நன்னிலம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் நன்னிலம் டி.எஸ்.பி. அருண் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருவாரூரில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து வீட்டில் நகை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com