டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

காட்பாடியில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த டாக்டர் வீடு
கொள்ளை நடந்த டாக்டர் வீடு
Published on

வேலூர்:

காட்பாடி பாரதி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமணய்யா (வயது 63). டாக்டரான இவர் குடியாத்தம் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி குமாரி. மகன் சர்வபள்ளி பல் டாக்டராக உள்ளார்.

நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் தோட்டத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் வழியாக உள்ளே ஏறிக் குதித்தனர். முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்து முடியாததால் பீரோ சாவியை தேடியுள்ளனர்.

பீரோ சாவி அங்குள்ள அலமாரியில் இருந்தது. சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி, பாஸ்போர்ட் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.

தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்க வீட்டில் கொள்ளை நடந்த அறை மற்றும் வாசல் பகுதி என அனைத்து இடங்களிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு கும்பல் சென்றுவிட்டனர்.

நேற்று இரவு வீடு திரும்பிய டாக்டர் ரமணய்யா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காட்பாடியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com