ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அஞ்சலி: கறுப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை- முதல்வர் ஆகியோர் மவுன ஊர்வலமாக வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Published on

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்.- அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

அண்ணா சிலையில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாக சென்று மெரினா கடற்கரையை அடைந்தது.


அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கறுப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடம் அருகே போடப்பட்ட மேடையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா நினைவு நாள் குறித்த உறுதிமொழியை தொண்டர்கள் எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, பென்ஜமின், மா.பா.பாண்டிய ராஜன், ராஜேந்திரபாலாஜி, கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ.,

தலைமை கழக பேச்சாளர் டைரக்டர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், பெரம்பூர் மகேஷ், ஜெயஸ்ரீ மகேஷ், சென்னை மாவட்ட அண்ணா டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் ஏ.என்.சிவகுமார், நிர்வாகிகள் லோகநாதன், திருவேங் கடம், வடிவேலு, ஆதிராம், முருகேசன், முருகன், ராஜ பாண்டி, துரைப்பாண்டி, வக்கீல் சிவசங்கரன், டேவிட் ஞானசேகரன், பசும்பொன் மக்கள் கழக தலைலர் இசக்கி முத்து, பெரும்பாக்கம் ராஜசேகர், பூ.சி.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அவர் சமாதி அருகில் அழுது புரண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com