ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை - முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் 2½ மணி நேரம் வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜராகி 2½ மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம்
முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம்
Published on

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. ஆணையம் நேற்று விசாரணை நடத்த யாருக்கும் சம்மன் அனுப்பவில்லை.

முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் நேற்று காலை 10.10 மணிக்கு விசாரணை ஆணையம் எங்கு உள்ளது? என்று விசாரித்து வந்தார். அங்கு செயலாளர் கோமளாவிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்ததால் தனது வாக்குமூலத்தை அளிக்க வந்துள்ளதாக கூறினார்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ராமானுஜம் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாகவும், தமிழக அரசு ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மாநில தகவல் ஆணையராக பணியாற்றினார்.

போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றிய அவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால் அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருந்தது. 2 முறை காலஅவகாசம் கோரிய அவர் நேற்று காலை திடீரென்று ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது.

விசாரணையின்போது, ஜெயலலிதா-சசிகலா இடையே ஏதேனும் பிரச்சினை இருந்ததா? சசிகலா உறவினர்கள் யார், யாரெல்லாம் போயஸ்கார்டன் வந்துசென்றனர்? என்பது போன்ற பல கேள்விகளை நீதிபதி கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ராமானுஜம் பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை நேரில் பார்த்தீர்களா? என்று நீதிபதி கேட்டதற்கு, தொந்தரவாக இருக்கும் என்று கருதி மருத்துவ மனைக்கு சென்று பார்க்கவில்லை என்றும், போயஸ்கார்டன் திரும்பியதும் பார்க்கலாம் என்று இருந்ததாகவும் கூறினார்.

மதியம் 1 மணி வரை 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. ஆணையத்தில் இருந்து வெளியேவந்த அவரிடம் ஆணையத்தில் நடந்த விசாரணை குறித்து நிருபர்கள் கேட்டபோது, ஆணையத்துக்கும் தனக்கும் இடையேயான விவகாரம் என்றும், இதுகுறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் கூறிவிட்டு சென்றார்.

ராமானுஜம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையத்தில் ஆஜரான டி.ஜி.பி. ராமானுஜம் தன்னுடன் யாரையும் அழைத்துவரவில்லை. அவரே காரை ஓட்டிவந்தார். அவர் ஆணையத்தில் ஆஜரான விவரம் தெரிந்து நிருபர்கள் ஆணைய அலுவலர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதுபோன்று அவர் ஆஜராகவில்லை என்று பதில் அளித்தனர்.

ஆனால் அந்த சமயத்தில், ராமானுஜம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துக்கொண்டு இருந்தார். அவர் ஆஜரானதை ஆணைய அலுவலர்கள் தெரிவிக்க மறுத்ததை வைத்து பார்க்கும்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டு இருந்ததா? அல்லது தான் ஆஜராவது வெளியில் தெரியக்கூடாது என்று ராமானுஜம் கேட்டுக்கொண்டதன் பேரில் ரகசியம் காக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com