முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடிதம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தீபக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடிதம்
Published on

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு போயஸ்கார்டன் வீட்டில் அவரது தோழி சசிகலா தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

அங்கிருந்து ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவரை தேடி அமைச்சர்களும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போயஸ் தோட்டத்துக்கு படையெடுத்தனர்.

முதலில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா பின்னர் முதல்-அமைச்சர் பதவிக்கும் குறி வைத்தார்.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் போயஸ் கார்டன் வீடு ‘களை’ இழந்தது.

அங்கிருந்த சசிகலா குடும்பத்தினரும் படிப்படியாக வீட்டை விட்டு வெளியேறினர். தனியார் பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் போயஸ் கார்டன் வீடு எந்தவித பரபரப்பும் இன்றி காட்சி அளித்தது.


இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்தது.

என்னை வீட்டுக்கு வரவழைத்து தீபக் திட்டமிட்டு சசிகலா குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி விட்டதாக குற்றம் சாட்டினார். இதன் மூலம் தீபா-தீபக் குடும்ப சண்டையும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் போயஸ்கார்டன் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வீடு அவரது வாரிசுதாரர்கள் என்ற முறையில் எங்களுக்கே சொந்தம் என்று தீபாவும், தீபக்கும் ஏற்கனவே கூறி வந்தனர். அது தொடர்பான உயில் எங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவதற்கு தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாரிசுகளான எங்களிடம் எந்தவிதமான கருத்தையும் கேட்காமல் எப்படி இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சரும் எங்களது அத்தையுமான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்கப் போவதாக அறிவித்துள்ளீர்கள். இதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் இருக்கும் இடம் ஜெயலலிதாவின் தாயாரும் எங்களது பாட்டியுமான சந்தியா வாங்கிய சொத்தாகும். அதற்கு இப்போது நானும் எனது சகோதரி தீபாவும் மட்டுமே உண்மையான வாரிசுதாரர்களாக உள்ளோம்.

அவர் வசித்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் முன்னர், அந்த சொத்தின் வாரிசுகள் என்ற அடிப்படையில் எங்கள் இருவரிடமும் சட்டப்படி கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்காதது தவறாகும்.


போயஸ் கார்டன் வீடு தனது காலத்துக்கு பிறகு யாருக்கு சொந்தம் என்பது பற்றி பாட்டி சந்தியா உயில் எழுதி வைத்துள்ளார். அதில் எனக்கும் எனது சகோதரி தீபாவுக்குமே போயஸ் கார்டன் வீடு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சொத்துரிமை சட்டப்படியும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளபடியும் நாங்கள் இருவர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பது உறுதியாகும்.

எனவே, போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், என்னிடமும், எனது சகோதரி தீபாவிடமும் கலந்து ஆலோசித்து சட்டப்பூர்வ அனுமதியை பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com