ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் சிகிச்சை வீடியோவை வெளியிடவில்லை: தினகரன் விளக்கம்

நைட்டி உடையில் ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் சிகிச்சை வீடியோவை வெளியிடவில்லை என்று டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் சிகிச்சை வீடியோவை வெளியிடவில்லை: தினகரன் விளக்கம்
Published on

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மீது நம்பகத்தன்மை குறைந்து விட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் நேற்று ஒன்று சொல்லி விட்டு இன்று வேறொன்று சொல்கிறேன் என்றால் இளைஞர்கள் அதை வாட்ஸ்அப்பில் போட்டு விடுகிறார்கள். தடம் புரண்டு பேசுபவர்களை அவர்கள் மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஓ.எஸ்.மணியன், ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட விதிகள் தவறு என்ற நிலைக்கு சென்று விட்டனர். அம்மா இன்று இருந்தால் அவரைக்கூட நீக்குவோம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது அவரையே எதிர்க்கக்கூடிய தியாகத் தொண்டர் ஓ.எஸ்.மணியன். அவர் பேசுவதற்கு பதில் சொல்லி அவரது லெவலுக்கு இறங்கிச் செல்ல நான் விரும்பவில்லை.

அம்மா மறைவுக்கு பிறகு தம்பிதுரை டெல்லிக்கு செல்வதில்லை. காலை 7 மணி முதல் மாலை வரை போயஸ்கார்டனில் எங்களுடன்தான் இருப்பார். சின்னம்மா பொதுச் செயலாளர், முதல்வர் ஆக வேண்டும் என்று கூறுவார்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கட்சி சட்ட விதிகளின்படி சின்னம்மாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்தனர். நாங்கள் யாரும் பொதுக்குழு நடந்த திருமண மண்டபத்துக்கு செல்லவில்லை.

அன்று பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி 1½ மணி நேரம் சின்னம்மாவிடம் கெஞ்சி தொப்... தொப்... என்று காலில் விழுவது வாட்ஸ் அப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் இருவரும் நெடுஞ்சான் கிடையாக விழுந்தனர். அப்போது இங்கு எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் இருக்கிறோம். உடனே கவர்னரை பார்த்து சின்னம்மாவை முதல்வராக்கி விடலாம் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார்.

ஜெயலலிதா மரணத்தின் போது பொய் சொன்னோம் என்று கூறும் திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் 3 மாதங்கள் கழித்து பதவியை விட்டு தூக்கி விடுவதாக எடப்பாடி மிரட்டியதால் மாற்றி பேசினேன் என்று கூறலாம் அல்லவா? இவர்களின் தரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் சீனிவாசன் சாப்பாட்டு ராமன் போல இட்லி, தோசை எல்லாவற்றையும் வாங்கி சாப்பிடுவார். அவர் அம்மா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னேன் என்கிறார். அவர் பதவியை தக்க வைப்பதற்காக இப்படி பேசுகிறார்.

அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க.தான் சொன்னது. அம்மா மரணத்துக்கு சின்னம்மாதான் காரணம் என்று ஒரு தவறான பிரசாரத்தை அவர்கள் மக்கள் மத்தியில் வைத்தார்கள்.

அப்போது சென்னையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருந்த சின்னம்மா படத்தை மட்டும் கிழிப்பார்கள். இது தி.மு.க.வினரின் வேலை. குப்பை தொட்டியில் குப்பை பொறுக்கியவர்களுக்கு பணம் கொடுத்து இதை செய்யச் சொல்வார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சின்னம்மாவின் வேட்பாளராக நான் நின்றபோது அவர் என்னை அழைத்து பொய் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நீயே வெற்றி பெற வேண்டும் என்றார்.

அப்போது சின்னம்மா படத்தை கிழிக்க தி.மு.க.வினர் சதி செய்திருப்பதாக வெற்றிவேல் கூறினார். எனவே சின்னம்மா படத்தை போடவில்லை. தி.மு.க.வினரின் சதியை முறியடித்து விட்டு சின்னம்மா படத்தை போஸ்டரில் போடலாம் என்று முடிவு செய்தோம்.

அம்மாவின் மரணம் தொடர்பான சந்தேகம் இப்போது கிளம்புகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி விசாரணை கமி‌ஷன் அமைக்கிறேன் என்றார். அது இன்னும் அமைக்கப்படவில்லை.

அது பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்துவதற்காகத்தான். இப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் மூத்த நீதிபதியை வைத்து விசாரணை கமி‌ஷன் அமைத்தால்தான் நல்லது.

அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சி.சி.டி.வி. வீடியோ அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம்தான் இருக்கும். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு அம்மா எடை குறைந்திருந்தார்.

எனவே அவரை வீடியோ எடுக்க வேண்டும் என்று சொன்னபோது எனது சித்தியே (சசிகலா) வீடியோ எடுத்தார். புரட்சித் தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது எடுத்த படத்தை செய்தித்தாளில் வெளியிட்டதுபோல ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட வேண்டும் என்று எல்லோரும் கூறினார்கள். அதை வெளியிட்டால் தெரியும்.

அம்மாவை நைட்டியில் யாரும் பார்க்க முடியாது. நாங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறோம். வேறு எந்த நிர்வாகியும் அவரை நைட்டியில் பார்த்திருக்க முடியாது. அவர் 1989-ல் கார் விபத்துக்குள்ளாகி படுத்திருந்த போது ராஜீவ்காந்தி வந்து பார்த்தார். அப்போது கூட முழுவதும் மூடிய நிலையில்தான் படுத்திருப்பார். அது போல அவர் எப்போதும் பராமரித்து வந்தார். அவர் அன்று நைட்டியில் படுத்திருந்தார். அதை வீடியோவில் எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ உள்ளது.

இதையெல்லாம் ஆர்.கே.நகர் தேர்தலில் பயன்படுத்த வேண்டும். உங்களை எல்லோரும் குறை சொல்கிறார்கள் என்று சின்னம்மாவிடம் கேட்ட போது மறுத்து விட்டார்.

அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார். நீதி விசாரணை வேண்டும் என்று நாமே கேட்டு அந்த நீதி விசாரணையில் அதற்குரிய இடத்தில் இந்த வீடியோவை நாம் தாக்கல் செய்வோம். அதை பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டாம்.

அம்மா ஒரு பெண்மணி. நைட்டி போட்டிருந்தார். எடை குறைந்ததால் நைட்டி லூஸ் ஆகியிருக்கும். அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த படியே டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார். அதுதான் அந்த வீடியோ.

அதை வெளியிட்டால் அது உண்மையா பொய்யா என்று வாதம் நடத்துவீர்கள். அதனால்தான் எங்கு கொடுக்க வேண்டுமோ அது சி.பி.ஐ. ஆக இருந்தாலும் சரி. இண்டர்போல் ஆக இருந்தாலும் சரி அங்கு கொடுப்போம். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயப்பட வேண்டும். விசாரணை கமி‌ஷன் வந்தால் முதலில் பதில் சொல்ல வேண்டியது பன்னீர் செல்வம்தான். ஏனென்றால் அப்போது அவர்தான் முதல்வராக இருந்தார். அன்று எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com