

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர், தனி செயலாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு டாக்டர்கள், சந்தேகம் எழுப்பியவர்கள் என பல்வேறு தரப்பினரும் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டு, ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை வழங்கியது. பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவும் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமமோகன ராவ், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்ததாக கூறினார். அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை பார்த்தீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.