ஜெயலலிதா மரண விசாரணை- அரசு டாக்டர்கள் 2 பேரிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை

ஜெயலலிதா மரண விசாரணை குறித்து அரசு டாக்டர்கள் 2 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் பல்வேறு கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை நடத்தினர். #Jayalalithaadeathinquiry
ஜெயலலிதா மரண விசாரணை- அரசு டாக்டர்கள் 2 பேரிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை
Published on

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், ஜெயலலிதாவின் அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளர் வெங்கடரமணன், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா கை ரேகைக்கு சான்று அளித்த அரசு டாக்டர் பாலாஜி, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி முதல்வர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உயர் டாக்டர்கள், அப்பல்லோ டாக்டர்கள் உள்பட முக்கியமானவர்களும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதில் முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, மருத்துவ கல்லூரி முதல்வர் நாராயணபாபு ஆகிய 2 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் அரவிந்தன், சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை நடத்தினார்கள்.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட 5 மருத்துவர்களுக்கு அதற்கான கடிதத்தை அளித்தவர் விமலா.

இவர் நவம்பர் மாதம் ஆணையத்தில் ஆஜரான போது ஜெயலலிதாவை நேரில் பார்க்க முயற்சி செய்யவில்லை என்று கூறி இருந்தார்.

இதே போல் டாக்டர் நாராயண பாபு அரசால் நியமிக்கப்பட்ட 5 டாக்டர்களும் அப்பல்லோவில் இருக்கிறார்களா? என்பதை பார்க்க சென்றவர்.

இதனால் இவர்கள் இருவரிடமும் சசிகலா தரப்பு வக்கீல்கள் பல்வேறு கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் வெளியே வந்த நாராயணபாபு நிருபர்களிடம் கூறும்போது, குறுக்கு விசாரணையின் போது வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு விவரமாக பதில் அளித்தாக தெரிவித்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு நான் பார்க்கவில்லை என்று தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த மாதம் 6-7 தேதிகளில் இன்னும் 5 அரசு டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. இவர்களை தொடர்ந்து அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com