

பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் மனித நேய மக்கள் கட்சி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மத ரீதியான பாரபட்சம் ஆகும்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை தவிர்த்து மற்ற சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று விஷமத்தனமான நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த மசோதாவை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது.