

சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 முதல்-அமைச்சர்கள் மற்றும் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.விற்கு வாக்கு சேகரிக்க நடத்திய வெறுப்பு பரப்புரைக்குத் தலைநகர் டெல்லி மக்கள் தம் வாக்குகள் மூலம் தகுந்த தண்டனை கொடுத்துள்ளனர்.
என்.பி.ஆர்., என்.ஆர்.சி. மற்றும் சி.ஏ.ஏ. திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் குடியுரிமையைச் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாற்றி உள்ள பா.ஜ.க.விற்குத் தகுந்த பாடத்தை டெல்லி மக்கள் புகட்டியுள்ளார்கள்.
பா.ஜ.க.வின் வெறுப்பு பரப்புரையை வீழ்த்துவதற்குச் சிறந்த வியூகத்தை வகுத்து மூன்றாம் முறையாக மீண்டும் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்.பி.ஆர்., என்.சி.ஆர்., சி.ஏ.ஏ. ஆகிய கருப்பு திட்டங்களை எதிர்த்து பாராளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமியாமில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து 3-வது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போராட்டத்தில் பங்குக் கொண்ட மாணவிகள் மீது மிக மோசமான முறையில் கொடூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீதான இந்த தொடர் தாக்குதல் மத்திய பா.ஜ.க. அரசின் மாணவர் விரோதப் பாசிசப் போக்கையே காட்டுகிறது.
மாணவர்களின் மீது நடத்தப்படுகின்ற இது போன்ற பாசிச கொடூர தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.