நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு
Published on

இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து நவஇந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. அவர் பிரதமராக பதவி வகித்தபோது, நாள்தோறும் அவரது பணிகளை எப்படி அமைத்துக்கொண்டார் என்பதை பார்க்கிறபோது இந்தியாவைப் பற்றிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை காண முடியும். பேராற்றல் மிக்க இந்த மனிதர், தம்முடைய நாளை எப்படி செலவிட்டிருப்பார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நேரு பொறுப்பு மிகுந்த பல பதவிகளை வகித்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தார்.

1951 முதல் 1954 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். குளிர்காலத்தில் காலை 6.30 மணிக்கு நேரு எழுந்து விடுவார். (கோடையில் அரைமணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்) அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார். காலை 7.30 மணி வாக்கில் அந்த நாளின் கடினமான சவால்களைச் சந்திப்பதற்காக தயாராகிவிடுவார். தமது தனி அறையில், தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும், பல தந்திகளும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. காலை உணவு எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகாது. உணவுக்காக காத்திருப்பது அவருக்கு ஏற்புடையதன்று. வழக்கமாக காலை உணவில் பழச்சாறு, தானிய உணவு, முட்டை, ரொட்டி, காபி ஆகிய மேற்கத்திய உணவு வகைகள் இருக்கும். அவர் மகள் இந்திரா அனேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு மகன்களும் விடுமுறை காலங்களில் உடன் இருப்பார்கள்.

வசிக்கும் வீட்டில் இருந்து இறங்கி தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்திற்கு 8.15 மணி அளவில் நேரு வருவார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் மக்கள் காத்திருப்பார்கள். சில சமயங்களில் 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்பு பிராணிகளுடன் சிறிது நேரம் செலவிடுவார்.

பாராளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். காலை ஒன்பது மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்கு பிறகு 2.45 மணி முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் இருப்பார். இங்கு வெளிநாட்டு தூதுவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சி தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திப்பார். மலைபோல குவிந்திருக்கும் கோப்புகளைக் கருத்தூன்றி படிப்பார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்கவேண்டிய விஷயங்கள் பலவற்றை கவனிப்பார். இவற்றுடன் சந்திப்புகளும், எழுத்து பணிகளும் தொடரும். அரைமணி நேரத்திற்கு சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். இவர்கள் நேருவின் அருகிலேயே அவரது அழைப்புக்காக எப்போதும் காத்திருப்பார்கள். உண்மையில், இவைதான் தடைபடாத அவரது அலுவலக பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நேரு குறிப்புகளை எடுத்துக்கொள்வார். சந்திப்புக்கு பிறகு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள இது உதவும்.

இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒரு சில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்க இயலாதுபோன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்திற்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் அவர் உடனிருப்பார். மாலையில் நடைபெறும் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 மணி வரை கலந்துகொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் உள்ள அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ பணிபுரிவார்.

நேரு உடனான உரையாடல்கள் அனைத்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் பொறுமை இழந்து, “அன்புடையீர், உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருப்பதற்கு எனக்கு வாழ்நாள் போதாது” என்று சொல்லி விடுவார். ஏற்றுக்கொள்ள முடியாத எந்தவொரு கருத்துக்கும் அவரது முதல் எதிர்வினை சினம் கொண்டதாக இருக்கும். ஆனால், அதனை நீங்கள் தாங்கிக்கொண்டுவிட்டால், அமைதியாகி, நீங்கள் சொல்வதை கேட்பார்.

தமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும்போது, நேரு எளிதில் சினம் கொள்வார். படபடவென்று பொரிந்து தள்ளிய பிறகு, உடனடியாக அமைதியாகிவிடுவார். வெளியுறவுத்துறை அலுவலகத்தில் தமது அறைக்கு செல்ல அவர் ஒருபோதும் மின்தூக்கியைப் பயன்படுத்தியதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படிகளைத் தாவி ஏறிச் செல்வதுதான் அவரது வழக்கம். ஒரு நாள் காலையில் அவரோடு சேர்ந்து சென்றபோது, ‘ஒரே நேரத்தில் இரண்டு படிகளை ஏன் கடக்கவேண்டும்? ஒவ்வொன்றாக ஏறினால் போதாதா? என்று அவரது செயலாளர் கேட்டார். எரிச்சலடைந்தவராய் அவரை திரும்பிப்பார்த்து என்னை வயதானவன் என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று சொன்னார்.

தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் 17 ஆண்டுகாலம் உழைத்தார். ஒரு சில சமயங்களில் இரவு 11 மணிக்கு மேல் அவரது செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொள்வார். அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசவேண்டும் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பார். அந்த நேரமும் அவரது வேலை நேரத்திற்குள் அடங்கும். இத்தகைய கடுமையான உழைப்பின் மூலம் தான் இன்றைய நவீனஇந்தியாவிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com