ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்: மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது

83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு, ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்: மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது
Published on

டோக்கியோ :

ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) உள்ளார். இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கிறார்.

இந்த நிலையில், மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி, ‘கிறிசாந்தமம்’ சிம்மாசனத்தை பட்டத்து இளவரசர் நருஹிட்டோவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை நேற்று வழங்கியது.

தற்போது ஜப்பானில் இம்பீரியல் இல்ல சட்டத்தில், மன்னர் பதவி விலகுவதற்கான விதி இல்லை.

இதன் காரணமாக மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது.

மந்திரிசபை ஒப்புதலைத் தொடர்ந்து இந்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் முடிகிறபோது, அந்த மசோதா நிறைவேற்றப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

மன்னர் அகிஹிட்டோவுக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி 85-வது வயது பிறக்கிறபோது, அவர் பதவி விலகலாம் என பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போதைய கெங்கோ சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய சகாப்தம் மலர இருக்கிறது.

மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ முறைப்படி மன்னராக முடிசூட்டப்படுவார்.

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது.

ஆனால் இளவரசி மேக்கோ, பொதுமக்களில் ஒருவரான கீ கொமுரு என்பவரை காதலித்து வருகிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இளவரசி அந்தஸ்தை விட்டுத்தருகிறார். எனவே அவரது திருமணத்துக்கு பின்னர் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com