

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 3 ராணுவ வீரர்களின் உடல்களை மீட்பு படையினர் நேற்று மீட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே குரஸ் செக்டார் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.
கடந்த 12-ம் தேதி இந்த ராணுவச்சாவடி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.
இதையடுத்து, அங்கு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மாயமான வீரர்களை மீட்கும் பணி தொடங்கியது. கடும் பனிப்பொழிவு நிலவியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதேபோல் குப்வாரா மாவட்டத்தில் நுஹம் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது.
இந்நிலையில், ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குருஸ் செக்டாரில் 2 ராணுவ வீரர்களின் உடல்களும், நவ்காம் செக்டாரில் ஒரு ராணுவ வீரரின் உடலையும் மீட்பு படையினர் நேற்று மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மீட்பு படையின் அதிகாரிகள் கூறுகையில், பனிச்சரிவில் சிக்கி மாயமான மேலும் 2 ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.