அரசாணை வெளியிடாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்ட விரோதம்: உயர்நீதிமன்ற கிளை கருத்து

அரசாணை வெளியிடப்படாமல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை சட்ட விரோதம் என கருதலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. #Jallikattu #MaduraiHighCourt
அரசாணை வெளியிடாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்ட விரோதம்: உயர்நீதிமன்ற கிளை கருத்து
Published on

ஸ்ரீவைகுண்டம் மற்றும் திண்டுக்கல் உலகம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை, அனுமதி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் இடங்கள் அரசாணையில் இல்லை என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்.

‘2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் மொத்தம் 354 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதில், விலங்குகள் நல வாரியம் கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், மனுதாரர்கள் கேட்கும் கிராமங்கள் அரசாணையில் இடம்பெறவில்லை. அதனால் அனுமதி வழங்க முடியாது’ என அரசு வழக்கறிஞர் கூறினார்.

அப்போது, 2017-ல் வெளியிட்டபட்ட அரசாணையில் இல்லாத இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘ஜல்லிக்கட்டு 2017-ல் நடத்த மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அரசாணை எதுவும் வெளியிடப்பட்டதா? அரசாணை வெளியிடப்படாமல் இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் ஆக கருதப்படும்’ என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றார்.

இதையடுத்து அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com