ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
Published on

ஜெய்ப்பூர்:  

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான, ஜெய்ப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர். 185 பேர் காயமடைந்தனர்.  

இச்சம்பவங்களுக்கு வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்புதான் காரணம் என கூறப்பட்டது.

இதையடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது சயீப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமான், ஷாபாஸ் ஹூசைன் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஷாபாஸ் ஹூசைன் என்பவரை தவிர மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஷாபாஸ் ஹூசைன் என்பவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டது. 

குற்றவாளிகளுக்கான தண்டனை இருதினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4  பேருக்கு மரணதண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com