ஜெயிலில் சசிகலா சொகுசு வாழ்க்கை: கர்நாடக அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை குறித்து விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.
ஜெயிலில் சசிகலா சொகுசு வாழ்க்கை: கர்நாடக அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
Published on

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு சிறையில் பல சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத் துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்ய நாராயணராவ் ரூ.2 கோடி பெற்றதாகவும் அப்போதைய டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறையில் உள்ள அறைகளில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை வீடியோ மற்றும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருந்து வெளியில் சென்று வருவது போல வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்தார். விசாரணை தொடங்கப்பட்ட பின் வினய்குமார் 2 முறை அவகாசம் கேட்டறிந்தார்.

அப்போது சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா, சிறை தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளராக இருந்த அனிதா உள்பட பலரிடம் விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர் அவர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று ஆய்வும் மேற்கொண்டார். இந்த நிலையில் விசாரணை முடிந்து கர்நாடகா அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:-

பரப்பன அக்ரஹார சிறையின் முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட வினாய்குமார் குழுவினர் தங்கள் விசாரணையை முடித்து உள்ளனர்.

அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். அடுத்து நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் முதல்- மந்திரி சித்தராமையாவிடம் ஆலோசித்து நானே நடவடிக்கை எடுப்பேன்,

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை அறிக்கையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சொகுசு வசதிகள் உண்மை என்றும், சிறைத் துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு உள்ளனர் என்றும் குறிப்பிட்டு உள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com