

ஐதராபாத்:
தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு கோரி வருகிறது.
மத்திய அரசு மறுத்து விட்டதால் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த தெலுங்குதேசம் கட்சி மந்திரிகள் 2 பேர் ராஜினாமா செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த 2 மந்திரிகள் விலகினார்கள். இதனால் பா.ஜனதா - தெலுங்கு தேசம் இடையேயான உறவு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்துகோரி மத்திய மந்திரி சபையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதை வரவேற்றுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
பிரகாசம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில், இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
அடுத்து பொதுத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கும். சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக ஆந்திர மக்களுக்கு பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை பா.ஜனதா குழிதோண்டி புதைத்து விட்டது.
மக்கள் கொடுத்த நெருக்கடியால் தான் சந்திரபாபு நாயுடு மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews