

மதுரை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு, ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்னை தலைமை செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மதுரையிலும் அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்துது புறப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் புதூர், ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்களிலும் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் ஆயுதப்படை மைதானம் மற்றும் சூர்யா நகர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் பஸ் நிலையங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
வாகனங்களில் செல்லும் அரசு ஊழியர்களை கைது செய்யும் வகையில் வாகன சோதனையையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
தூத்துக்குடி கால்நடை ஆய்வாளர் சங்கத்தைச் சேர்ந்த 12 பெண்கள் உள்பட 23 பேர் விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் சென்னையில் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் இவர்களை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கருணாநிதி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.