

லண்டன்:
உலக தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. வருகிற 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘போரிஸ் பெக்கர்’ அணி பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், ‘பீட் சாம்ப்ராஸ்’ அணி பிரிவில் டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் காயம் அடைந்த ரபெல் நடால் விலகியதால் அவருக்கு பதிலாக பாப்லோ கார்னோ பஸ்டா (ஸ்பெயின்) சேர்க்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
3-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் ஜாக் சோக் (அமெரிக்கா), 5-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜாக் சோக் 5-7, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார். மரின் சிலிச் தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.