

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பான ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகளாக கடந்த 1980-ம் ஆண்டு பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவிடம் ஒப்படைக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக தெரியவந்தது. என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு எங்கள் குல வழக்கப்படி நடைபெறவில்லை. எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து, குல வழக்கப்படி சம்பிரதாய சடங்குகளை செய்து மீண்டும் அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த மாதம் விசாரித்தார். அப்போது, இந்த வழக்கிற்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கை பிப்ரவரி 3-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி வைத்தியநாதன் முன்பு அரசு வக்கீல்கள் ஆஜராகி, இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை பிப்ரவரி 3-ந் தேதிக்கு பதில், 20-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்.