சசிகலா காலில் விழுந்து பதவியை ஒப்படைத்தவர் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா கடும் தாக்கு

அம்மாவின் மறைவிற்கு பிறகு சசிகலா காலில் விழுந்து வணங்கி பொதுச் செயலாளர் பதவியை ஒப்படைத்தவர் ஓ.பி.எஸ். என்று அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறி உள்ளார்.
சசிகலா காலில் விழுந்து பதவியை ஒப்படைத்தவர் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா கடும் தாக்கு
Published on

சென்னை:

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று அம்மா மறைவிற்கு பிறகு ஓ.பி.எஸ். அணி என்றும் சசிகலா அணி என்று அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தன.

சசிகலா அணி மீண்டும் எடப்பாடி அணி என்றும், டி.டி.வி.தினகரன் அணி என்றும் இரண்டாக பிரிந்திருக்கிறது. இந்த அணிகளில் புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் உண்மையான தொண்டர்கள் யாருமில்லை.

உண்மையான தொண்டர்களின் வீடாக எனது தலைமையில் அ.தி.மு.க. என்னும் மக்கள் பேரியக்கம் செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ். முதல்வர் பதவியை சசிகலாவால் இழந்தபிறகு கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்தது போல் அம்மா ஆன்மா பேசியதாக நாடகம் ஆடி அம்மாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும். கட்சியிலிருந்து சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் நீக்க வேண்டுமென்று கோரிக்கையுடன் வெற்று அரசியல் நடத்தினார்.

அம்மாவின் மறைவிற்கு பிறகு சசிகலா காலில் விழுந்து வணங்கி பொதுச் செயலாளர் பதவியை ஒப்படைத்தவர் ஓ.பி.எஸ். என்பதை நாடும் மறக்காது கழக தோழர்களும் மறக்க மாட்டார்கள். அம்மா மறைந்து 45 நாள் வரை முதல்வர் பதவியிலிருந்த ஓ.பி.எஸ். அம்மா மரணத்தைப்பற்றி வாய்திறக்காத மவுன சாமியார் சந்தர்ப்பவாதி என்பதை அம்மாவின் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.

தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வை அங்கீகரித்து பொருளாளர் என்ற பதவி மூலமாக கையெழுத்திட்டவர் தான் ஓ.பி.எஸ். அதைப்போல சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைபொதுச்செயலாளர் திகார் தினகரனை ஏற்றுக்கொண்டு வாழ்த்து பா பாடிய பதவிபித்தர் கூட்டம் தான் இ.பி.எஸ். கூட்டம்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலாவை சிறைக்கே சென்று அரசியல் மற்றும் ஆட்சி குறித்து ஆலோசனை நடத்திய அயோக்கிய அமைச்சர்கள் கூட்டம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அம்மாவின் வாரிசு நானே தேர்தல் களத்தில் நின்றபோது திகார் தினகரனை வேட்பாளராக நிறுத்தி வீதி வீதியாக வாக்குக்கு பணம் கொடுத்த பதவி வெறிபிடித்த கூட்டம் இ.பி.எஸ். தலைமையிலான கூட்டம் என்பதை எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணியினரும் கொடுத்துள்ள பிரமாண பத்திரங்கள் போலியானவையாகும் என்று அவர்களே மாறி, மாறி குற்றம் சொல்லியிருக்கிறார்கள். நாம் புரட்சித்தலைவர், புரட்சி தலைவியின் உண்மையான தொண்டர்களால் ரத்தம், வேர்வை சிந்தி 5.52 லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம் போலியான அந்த அணிகள் தயாரித்த ஆவண பத்திரங்களுக்கான சான்றுகள் நம்மிடம் ஆதார பூர்வமாக உள்ளது.

புரட்சித் தலைவரால் பாராண்ட இயக்கம் அம்மாவால் நாடாண்ட இயக்கம் மீண்டும் எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு கட்சியையும் கொடியையும் காப்போம் அரியணையில் அம்மாவின் விட்டுப் போன பணியானது எனது தலைமையில் தொண்டர்கள் ஆதரவுடன் நடைபெறப்போவது உறுதி, உறுதி. தேர்தல் ஆணையம் முடிவு நமக்கு வெற்றியைத் தரும்.

அ.தி.மு.க. எனும் பெரும் கடலான மக்கள் சக்தி இயக்கம் எனது தலைமையில் நிச்சயம் வெற்றி சரித்திரத்தை தொடங்குவோம். தொடருவோம், வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com