லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான பண பரிமாற்ற நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான பண பரிமாற்ற நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.
லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான பண பரிமாற்ற நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

புதுச்சேரி:

தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வீடுகள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளின் கடந்த 9-ந்தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

அதே வேளையில் புதுவை அம்பலத்தடையார்மடத்து வீதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையான ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான வெள்ளிநகை விற்பனைகடை, பணபரிமாற்ற நிறுவனம் மற்றும் காலாப்பட்டு அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சோதனை நடைபெற்றது.

லட்சுமி ஜூவல்லரியில் சசிகலா குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்று 4-வது நாளாக இந்த சோதனை நீடித்தது. மாலை 5.30 மணிக்கு நகைக்கடையில் சோதனை முடிந்தது. அப்போது 3 பைகளில் முக்கிய ஆவணங்கள் ஹார்டுடிஸ்குகள், சி.டி. ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

அதே வேளையில் பணபரிமாற்ற நிறுவனத்தில் இரவு முழுவதும் சோதனை நீடித்தது. இன்று காலை 6 மணிக்கு சோதனை முடிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த கடையில் இருந்தும் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.

இன்று காலை 10 மணிக்கு நகைக்கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் நகை வாங்க அனுமதிக்கப்பட்டனர். அதுபோல வெள்ளிநகை கடையும் திறக்கப்பட்டது. ஆனால் வெள்ளிநகை கடையில் கீழ்தளம் திறக்கப்படவில்லை. மாடியில் விற்பனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. அதே வேளையில் பண பரிமாற்ற நிறுவனம் 11 மணிக்கு பிறகே திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com