திருப்பூர், கரூர், ஈரோட்டில் நிதி நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

திருப்பூர், கரூர், ஈரோட்டில் நிதி நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதுவரை ரூ.30 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், கரூர், ஈரோட்டில் நிதி நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
Published on

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம், மூலனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மூலனூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்கள் குறித்தும் அவர்கள் செய்து வரும் வரி ஏய்ப்பு குறித்தும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் நிதி நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் சென்னை, கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மூலனூர் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நிதி நிறுவனங்களில் சோதனை நடத்தினர். 8-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நிறுவனங்களில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருப்பதும், வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. இன்று 2-வது நாளாகவும் மூலனூர் பகுதியில் உள்ள நிதிநிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது நிதிநிறுவனத்தினரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.

இதேபோல் கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர் வீடுகளிலும் இன்று 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதுகுறித்து ஒரு அதிகாரி கூறும்போது, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

2-வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது. இதுவரை ரூ.30 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது என்றார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து மூலனூர் பகுதியில் செயல்பட்டு வந்த பல்வேறு நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com