

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
187 இடங்களில் சுமார் 1800 பேர் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள், நகைகள் சிக்கின.
இதையடுத்து சசிகலா குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டி.வி.யின் தலைமை செயல் இயக்குனருமான விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். சொத்துக்கள் மற்றும் வரி ஏய்ப்புகள் தொடர்பாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளராக போயஸ்கார்டன் இல்லத்தில் பணிபுரிந்த பூங்குன்றனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அடையாறில் உள்ள அவர் வீட்டில் சிக்கிய பல முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடந்தது. சுமார் 10 மணி நேரம் பூங்குன்றனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பல புதிய தகவல்கள் கிடைத்தன.
பூங்குன்றன் தெரிவித்த சில தகவல்கள் காரணமாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு செய்து முறைப்படி அனுமதி பெற்றனர். நேற்றிரவு 9.30 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.
கூடுதல் கமிஷனர் ஒருவரது தலைமையில் சென்ற அந்த அதிகாரிகள் குழுவில் 15 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் கோர்ட்டு அனுமதியை காட்டி ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றனர். 9.55 மணிக்கு சோதனையைத் தொடங்கினார்கள்.
முதலில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை திறக்கப்பட்டு சோதனை நடந்தது. பூங்குன்றனின் அறை போயஸ் கார்டன் இல்லத்தின் முதல் மாடியில் உள்ளது. அந்த அறைக்குள் ஒரு பகுதியை கூட விடாமல் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை போட்டனர்.
பூங்குன்றனின் அறைக்குள் ஏராளமான எலக்ட்ரானிக் கருவிகள் இருந்ததாக தெரிகிறது. அந்த கருவிகளுக்குள் என்னென்ன பதிவுகள் செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்தனர். பூங்குன்றனின் மேஜை, பீரோக்களையும் திறந்து ஒவ்வொரு ஆவணமாக பார்த்தனர்.
சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். பூங்குன்றன் அறைக்குள் மட்டும் சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது. இறுதியில் அந்த அறைக்குள் இருந்த இரண்டு “லேப் டாப்”கள், இரண்டு “பென்-டிரைவ்”களை (சிலர் 4 பென்-டிரைவ் என்கிறார்கள்) அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் எழுதிய கடிதங்களும் அங்கு நிறைய இருந்தன. அதாவது அ.தி.மு.க. கட்சிகாரர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி எழுதிய கடிதங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில அ.தி.மு.க. தலைவர்கள் சொத்துக்கள் வாங்கியது பற்றி எதிர் தரப்பினர் எழுதிய கடிதங்களும் இருந்ததாக தெரிகிறது.
அந்த கடிதங்கள் அனைத்தையும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். எனவே அந்த கடிதங்களை பறிமுதல் செய்தனர். இரண்டு பெரிய பண்டல்களாக எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் தகவல் பரவியது. உடனே டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டு வந்தனர். இதை எதிர்பார்த்து தேனாம்பேட்டை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் தினகரன் ஆதரவு அ.தி.மு.க.வினரை சுமார் 500 மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தினார்கள்.
இரவு 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் போயஸ் கார்டன் வந்தார். அவரை ஜெயலலிதா வீட்டுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். அவர் வருமான வரித்துறை அதிகாரிகள் எத்தகைய சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை பார்த்தார்.
11.30 மணி அளவில் சசிகலா தங்கி இருந்த அறையை திறந்து சோதனையிட அதிகாரிகள் தயாரானார்கள். இதற்கு விவேக் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் கோர்ட்டில் பெற்றுள்ள அனுமதி கடிதத்தை காட்டி சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.
நள்ளிரவு சசிகலா அறை திறக்கப்பட்டு சோதனை நடந்தது. அந்த அறைக்குள்ளும் ஒரு கம்ப்யூட்டர், சில எலக்ட்ரானிக் கருவிகள், ஆவணங்கள் இருந்தன. அ.தி.மு.க. கட்சி நிர்வாகம் தொடர்பான கடிதங்களும் இருந்தன.
அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதை ஆய்வு செய்தனர். அந்த கம்ப்யூட்டரில் என்னென்ன பதிவுகள் உள்ளன என்று தெரியவில்லை.
என்றாலும் அதிகாரிகள் அந்த கம்ப்யூட்டரை கைப்பற்றி தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.
அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டனுக்கு வந்தார். அவரை போலீசார் 500 மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நள்ளிரவு 1.30 மணிக்கு ஜெயலலிதா அறையிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதை அறிந்த விவேக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘ஜெயலலிதா அறைக்குள் சென்று சோதனை நடத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என்று ஆட்சேபம் எழுப்பினார்.
அதிகாரிகளிடமும் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி எதுவும் இல்லை. எனவே ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தும் முடிவை வருமான வரித்துறை அதிகாரிகள் கைவிட்டனர். இரவு 2 மணிக்கு சோதனை முடிவுக்கு வந்தது.
இந்த சோதனை சுமார் 5 மணி நேரம் நடந்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியில் வந்ததும், ஜெயலலிதா வீடு அருகே திரண்டிருந்த சுமார் 150 அ.தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் செல்ல முயன்றனர்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வருகை அதிகரித்ததால் மற்ற காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைத்து குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோஷம் போட்டவர்களை கைது செய்து, அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். பிறகு விடிய, விடிய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலையிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போயஸ் கார்டனில் நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சில முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் இருப்பதாக எங்களுக்கு உறுதியான ஒரு தகவல் கிடைத்தது. எங்களுக்கு அந்த தகவல் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த சிலர் அந்த ஆவணங்கள், ஆதாரங்களை எடுத்துச் செல்லும் திட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சசிகலா, பூங்குன்றன் அறைகளில் எலக்ட்ரானிக் கருவிகளில் பதிவாகி இருக்கும் பல்வேறு தகவல்களை அழித்து விடும் முயற்சிகளில் ஈடுபட்டனர். முக்கிய ஆதாரங்களை சசிகலா அறையில் இருந்து எடுத்துச்சென்று விட வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது.
இது பற்றிய ரகசிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்தே நாங்கள் கோர்ட்டில் அனுமதி பெற்று இந்த ஆய்வு நடத்தினோம்.
நாங்கள் சோதனை நடத்தவில்லை. அவர்களது அறைகளில் ஆய்வுதான் செய்தோம்.
சசிகலா, பூங்குன்றன் இருவரது அறையிலும் இருந்த ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்தோம். மற்றபடி நாங்கள் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தவில்லை. ஆய்வு முடிவில் எலக்ட்ரானிக் கருவிகளை பறிமுதல் செய்துள்ளோம்.
அந்த எலக்ட்ரானிக் கருவிகளில் ஏராளமான தகவல் பதிவுகள் உள்ளன. சில தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த தகவல்களை நவீன முறையில் மீண்டும் எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம்.
இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். நாங்கள் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக சோதிக்கவில்லை.
அந்த இல்லத்தில் மேலும் பல அறைகள் உள்ளன. என்றாலும் சசிகலா, பூங்குன்றன் அறைகளில் மட்டுமே ஆய்வு நடத்தினோம். அங்கு கிடைத்துள்ள ஆதாரங்களே எங்களுக்கு போதும்.