வருமான வரித்துறையினர் ரெய்டு - பழனி நகை கடைகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பழனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பில் இல்லாமல் அதிக அளவு நகைகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
சோதனைக்கு பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர்
சோதனைக்கு பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர்
Published on

பழனி:

பழனி ரெயில்வே பீடர் ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய பகுதிகளில் கற்பகம், நியூ கற்பகம் ஜூவல்லரி என்ற பெயரில் 2 நகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் சுரேஷ், அவரது சகோதரர் பத்ரி மற்றும் கோபால் ஆகியோர் ஆவார்கள்.

நேற்று இந்த கடைக்கு திண்டுக்கல் வருமான வரித்துறை இணை ஆணையர் ரூபா தலைமையில் 15 பேர் அடங்கிய அலுவலர்கள் வந்தனர். அவர்கள் 2 நகை கடைகளிலும் பெரியகடை வீதியில் உள்ள உரிமையாளர்களின் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான அப்பார்ட்மெண்டிலும் சோதனை நடத்தினர். நேற்று நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்று அதிகாலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த நகை கடைகளில் பில் இல்லாமல் பலருக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் வரி ஏய்ப்பு செய்து நகைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

4 இடங்களிலும் நடந்த இந்த சோதனையில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகைகளின் இருப்பு, வரவு, விற்பனை போன்றவற்றை ஆய்வு செய்ததில் இருந்து விலை விபரங்கள் தெரிவிக்கும் வரை அனைத்திலும் முரணாக இருந்ததால் சோதனை நள்ளிரவையும் தாண்டி இன்று காலை வரை தொடர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வரி ஏய்ப்பு செய்து நகைகள் விற்பனை செய்ததால் வருமான வரித்துறை மேற்கொண்ட இந்த சோதனை பழனியில் மற்ற நகைக்கடை மற்றும் வணிகர்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com