‘சந்திரயான்-2’ வெற்றி பெறும் - இஸ்ரோ தலைவர் சிவன்

‘சந்திரயான்-2’ வெற்றி பெறும் என்றும் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
Published on

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பூமியில் இருந்து சந்திரன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு தூரம் பயணிக்க சந்திரயான்-2 விண்கலம் 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும். சந்திரனின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-2 தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும். சந்திரனின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இந்தியா புதிய சாதனை படைக்க இருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘சந்திரயான்-2’ விண்கலத்தை இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் சிறப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன.

சந்திரயான் விண்ணில் ஏவப்பட்ட பிறகு 48 நாட்கள், 15 கட்டங்களாக அதன் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டு சந்திரனை சுற்றி வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். அதன் பின்னர் சந்திரனின் தென்துருவ பகுதியில் சந்திரயான் இறங்கும்.

கடந்த முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்ததும் கவுண்ட்டவுனை நிறுத்திவிட்டோம். அதன்பிறகு பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதனால் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை. ‘சந்திரயான்-2’ திட்டம் வெற்றி பெறும்.

‘சந்திரயான்-2’ தென் துருவ பகுதியில் இறங்குவதால் இந்தியாவுக்கு விஞ்ஞான ரீதியாக நிறைய தகவல்கள் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com