ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #Kabulsuicideblast
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (மதத் தலைவர்கள்) பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த ஒருவன் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.

இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில் 70 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Kabulsuicideblast

X

Maalai Malar
www.maalaimalar.com