லெபனான் எல்லையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பஸ்கள் மூலம் சிரியா சென்றனர்

லெபனான் ராணுவத்துடன் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கையின்படி அந்நாட்டு எல்லையில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறி சிரியாவுக்கு சென்றனர்.
லெபனான் எல்லையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பஸ்கள் மூலம் சிரியா சென்றனர்
Published on

சிரியா மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையில் உள்ள மலைப்பகுதிகளில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில்  சிரியா படைகளுடன் லெபனானை சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிகளும் கடந்தவாரம் களமிறங்கினர். அதேவேளையில், சிரியா படைகளுடன் சேராமல் லெபனான் நாட்டு எல்லைப்பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து ஆவேச தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிரியா-லெபனான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கலாமோன் பகுதிக்குள் முன்னேறிச் சென்ற ஹெஸ்புல்லா கூட்டுப் படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பெரும்பான்மை நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் லெபனான் ராணுவத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தத்துக்கான உடன்படிக்கை செய்து கொண்டனர். லெபனான் நாட்டின் எல்லையோரம் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை விட்டு வெளியேறி விடுவதாகவும், சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு லெபனான் ராணுவம் அனுமதி அளித்தது.

இதைதொடர்ந்து, லெபனான் எல்லையில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பஸ்களில் ஏற்றி வெளியேற்றப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி அவர்கள் சென்ற பஸ்களுக்கு பாதுகாப்பாக சிரியா ராணுவ வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அணிவகுத்து சென்றதாக ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com