

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜமாஅத் தலைவர் தஸ்தகீர் தலைமையில் நாச்சிக்குளம் முகைதீன் பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் தேசிய கொடியை ஏந்தி பங்கேற்றனர். இந்தபேரணியானது முகைதீன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு நடுத்தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து நாச்சிக்குளம் கடைத் தெருவில் கூடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க திருவாரூர் ஏ.டி.எஸ்.பி அன்பழகன், மன்னார்குடி டி.எஸ்.பி கார்த்திக், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உட்பட ஆயிக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.