3 ஊழல் வழக்குகளை ஒன்றாக இணைக்கும் நவாஸ் ஷெரிப்பின் கோரிக்கை மனு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான மூன்று ஊழல் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். 

அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தனக்கு எதிராகவும் தன்னுடைய குடும்பத்தாருக்கு எதிராகவும் தொடரப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகளை ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் முறையீடு செய்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இதே கோரிக்கையுடன் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தை அவர் நாடினார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து முடிவு தெரியும்வரை தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என நவாஸ் ஷெரிபின் வக்கீல் கோரி இருந்தார்.  

இதற்கிடையில், இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இருதரப்பு வாதங்களையும் கவனித்த இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு, 23-11-2017 அன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.

இன்று காலை இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்பதற்காக நவாஸ் ஷெரிப் இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். நவாஸ் ஷெரிப்பின் கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்த நீதிபதிகள், உணவு இடைவேளைக்கு பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் தீர்ப்பின் முழு விபரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com