

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.