

வான்வெளியில் இருந்து பார்க்க கைரேகை போன்று காட்சியளிக்கும் கட்டிடத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் கட்டிடம் தாய்லாந்தில் அமைக்கப்பட்டு இருப்பதாக வைரல் பதிவுகளில் கூறப்படுகிறது.
இந்த கட்டிடம் உண்மையில் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ததில், இது விளம்பர நிறுவனம் ஒன்றின் கற்பனையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வரைப்படம் என தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படம் கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்து இருப்பதாக சமூக வலைத்தள பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாய்லாந்தின் பாங்காக் சார்ந்த ஸ்பைசி ஹெச் எனும் தனியார் நிறுவனம் இந்த வரைப்படத்தை விளம்பர நோக்கிற்காக உருவாக்கி வெளியிட்டு இருக்கிறது. இதுபற்றி பல்வேறு செய்தி குறிப்புகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்பைசி ஹெச் நிறுவனம் கைரேகை பாதுகாப்பு அமைப்புகள் சார்ந்த மென்பொருள் மற்றும் பேனல்களை உருவாக்கி வருகிறது. இதற்கென அந்நிறுவனம் மூன்று கட்டிடக்கலை சார்ந்த வடிவமைப்புகளை உருவாக்கியது. இந்த வடிவமைப்புகள் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த வகையில் கைரேகை கட்டிடம் உண்மை இல்லை என உறுதியாகி விட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.