ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்: சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதாலும் அதிகளவு பக்தர்கள் வருவதாலும் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
18-ம் படி முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை படத்தில் காணலாம்.
18-ம் படி முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை படத்தில் காணலாம்.
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த பிறகுதான் சுவாமி அய்யப்பனை தரிசிக்க முடிகிறது. இந்தநிலையில் அய்யப்ப பக்தர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதைதொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயில் மூலமே சபரிமலை வருகிறார்கள். இதனால் ரெயிலில் அய்யப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீரில் வி‌ஷத்தை கலக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக புலனாய்வுதுறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர் உள்பட அனைத்து ரெயில்நிலையங்களில் உள்ள போலீசாருக்கும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தல் சென்றுள்ளது.

இதுதொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது:-

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் தீவிரவாதிகள் மிரட்டல் பற்றிய தகவல்களை பலரும் பரிமாறி வருகிறார்கள். இதைக்கண்டு அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவை இல்லை. அந்த தகவலில் உள்ள உண்மைதன்மை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற தகவல்களின் உண்மை தன்மையை அறியாமல் யாரும் அவற்றை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி திருச்சூர் ரெயில்வே போலீசார் கூறும் போது சபரிமலை சீசன் காலத்தில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். எனவே பக்தர்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றனர்.

சபரிமலைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதாலும் அதிகளவு பக்தர்கள் வருவதாலும் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கு பிறகே அய்யப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com